திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக பரவிவரும் வெஸ்ட் நைல் என்ற காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே கேரளா முன்னணி மாநிலமாக இருந்த போதிலும் இங்குதான் தொற்று நோய்கள் அதிகமாக உள்ளன. நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நிபா, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல், ஷிகெல்லா உள்பட பல தொற்று நோய்கள் அடுத்தடுத்து பரவி வருகின்றன. இதைத் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.இந்நிலையில், திருச்சூரை சேர்ந்த ஜோபி என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவியது தெரிய வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, திருச்சூரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.* கொசுதான் காரணம்கியுலெக்ஸ் என்ற கொசுவின் மூலம் தான் மனிதர்களுக்கு நெஸ்ட் நைல் காய்ச்சல் பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டால் தலைவலி, வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். கவனிக்காமல் விட்டால் மூளையை பாதித்து பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.