பெங்களூரு : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, திராவிடரா, ஆரியரா என்று முதலில் விளக்க வேண்டும், என முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.”ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களா. அவர்கள் ஆதி இந்தியரா, திராவிடரா, ஆரியரா. வெளியில் இருந்து வந்தவர்கள். 600 ஆண்டுகளுக்கு முன், முகலாயர்கள் ஆட்சி புரிய யார் காரணம். ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால், அவர்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பரா. நேருவுடன் ஒப்பிட கூடாது,” என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூரில் நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்து, முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று கூறியதாவது:நேருவுடன் யாரையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்த போது, எந்த நடவடிக்கையும் அவர் எடுக்காமல் அவர்களுக்கு விட்டு கொடுத்தார். அதே வேளையில், நம் நாட்டு எல்லையை தற்போது ஆக்கிரமிக்க வரும்போதெல்லாம், பிரதமர் நரேந்திர மோடி உறுதியான பதிலடி கொடுக்ககிறார். பாகிஸ்தானுடன் சமாதானம் செய்து கொள்ளவில்லை.இந்தியாவை விரிந்த, ஒருங்கிணைந்த நாடாக காத்து வருகிறார் மோடி. நாட்டை பலம் வாய்ந்ததாக மாற்றியுள்ளார். எனவே நேருவை, மோடியுடன் ஒப்பிட முடியாது தான்.ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் திராவிடரா, ஆரியரா என கேட்கும் சித்தராமையா, திராவிடரா, ஆரியரா என்று முதலில் விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement