சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான இது இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தம் 343 அணிகள் கலந்து கொள்கின்றன. செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளில் இருந்து இத்தனை அணிகள் பங்கேற்க இருப்பது எண்ணிக்கையில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்தபோட்டியில் 179 நாடுகளில் இருந்து 184 (ஓபன்) மற்றும் 150 (பெண்கள் பிரிவு) அணிகள் கலந்து கொண்டதே அதிகபட்சமாக இருந்தது.
இந்த தகவலை அகில இந்திய செஸ் சம்மேளன செயலாளரும், போட்டிக்கான இயக்குனருமான பரத் சிங் சவுகான் நேற்று தெரிவித்தார். ‘இச்சாதனை உண்மையிலேயே எங்களுக்கு பெருமிக்க தருணம். கொரோனா பரவலுக்கு பிறகு நடக்கும் முதல் நேரடி செஸ் தொடர் இது தான்’ என்றும் குறிப்பிட்டார்.போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா இரு பிரிவிலும் ஏற்கனவே கூடுதலாக ஒரு அணியை அறிவித்துள்ளது. அத்துடன் 3-வதாக ஒரு அணியை இடம் பெற செய்யவும் இந்தியா வுக்கு வாய்ப்பு உண்டு. உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) களம் காண இருப்பதுசெஸ் ஒலிம்பியாட் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.