ஜெர்மனி கண்காட்சியில் தமிழக அரங்கு அமைப்பு- தொழில் முதலீடுகளை ஈர்க்க தீவிரம்

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சர்வதேச கண்காட்சிகளில் தமிழகத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகிறது. அந்த அரங்குகளில் தமிழகத்தில் தொழில் தொடங்க எந்தெந்த வகைகளில் எல்லாம் தேவையான சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கப்படுகிறது.

அந்த வகையில் துபாய், அபுதாபி, ஜெர்மனியில் நடந்த தொழில் கண்காட்சியில் தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டன. அந்த அரங்குகள் மூலம் கணிசமான அளவுக்கு தமிழகத்துக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு நேரில் சென்று தொழில் முதலீடுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் நாளை ‘ஹனோவர் மெசி-2022’ என்ற தலைப்பில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன.

ஜெர்மனி தொழில் கண்காட்சியில் தமிழக அரசு சார்பிலும் சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ள வாய்ப்புகள் பற்றி அந்த அரங்கில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அரங்கு அமைந்துள்ளது.

ஆற்றல், உற்பத்தி, நெட்வொர்க்கிங், லாஜிஸ்டிக் துறைகளில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த அரங்கு அமைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் தொழில் வழிகாட்டு நிறுவனத்தில் அதிகாரிகள் மற்றும் தொழில்துறை உயர் அதிகாரிகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.