ஹரியானாவில் 2024-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குருக்ஷேத்ராவில் இன்று பேரணியில் கலந்துகொண்டார். இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கிய கெஜ்ரிவால், பா.ஜ.க-வை கடுமையாகச் சாடினார்.
பேராணியில் பேசிய கெஜ்ரிவால், “நான் ஒரு எளிய மனிதன். எனக்கு அரசியல் எதுவும் தெரியாது. என்னால் முடிந்தவரை டெல்லி அரசுப் பள்ளியை மேம்படுத்தியிருக்கிறேன். இதன்மூலம், பள்ளிகளில் தேர்ச்சி விகிதமானது 99.7 சதவிகிதமாகியுள்ளது.
தங்களுடைய பிள்ளைகள் டாக்டர், இன்ஜினீயர், வக்கீலாக வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் வாருங்கள். இல்லை, கலவரக்காரர்களாகவும், குண்டர்களாகவும், பாலியல் வன்கொடுமையாளர்களாகவும் மாறவேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுடன்(பா.ஜ.க) செல்லுங்கள். அதற்கான அத்தனை கூறுகளும் அந்தக் கட்சியில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், உங்களின் பிள்ளைகளுக்கு ஒருபோதும் அவர்கள் வேலை கொடுக்கப்போவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு, வேலையில்லா குண்டர்கள் தேவை. மேலும் அவர்கள், உங்கள் பிள்ளைகளுக்கு கலவரம் செய்ய கற்றுக்கொடுத்து அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள்” என பா.ஜ.க-வை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.