பிரதமருக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை வழங்கிய மகளிர் சுய உதவி குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து, தஞ்சாவூர் பொம்மை மிகவும் அழகானது எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 89-வது ’மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று காலை ஒலிபரப்பானது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் யாராவது சதம் அடித்தால் சந்தோஷப்படுவீர்கள். ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்து இருக்கிறது. அதிலும் அது மிகவும் விசேஷமானது. இந்த மாதம் 5-ஆம் தேதியன்று தேசத்தின் யூனிகார்ன்களின் எண்ணிக்கை 100 என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டது. ஒரு யூனிகார்ன் என்பது குறைந்தப்பட்சம் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட்அப் ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த யூனிகார்ன்களின் மொத்த மதிப்பு 330 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது 25 லட்சம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமானது.
இந்த விஷயம் ஒவ்வொரு இந்தியருக்கும் கண்டிப்பாக பெருமிதம் அளிக்கவல்லது. ஸ்ரீதர் வேம்பு இப்போதுதான் ’பத்ம விருது’ கொடுத்து கவுரவிக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் என்றாலும், தற்போது மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்குவது என்ற சவாலை அவர் மேற்கொண்டிருக்கிறார். ஸ்ரீதர் தனது பணியை ஊரக பகுதியிலேயே தொடங்கி இருக்கிறார். அவர் கிராமங்களிலேயே வசித்து இருந்து ஊரகப்பகுதி இளைஞர்களை இந்தப் பணியில் பங்களிப்பு அளிக்கும் வகையில் உற்சாகப்படுத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சுய உதவி குழுவானது எனக்கு ஒரு பரிசினை அனுப்பியிருந்தது. இந்த பரிசிலேயே பாரதநாட்டின் மணம் வீசுகிறது. தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன. என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும், பாசமும் பணிவை ஏற்படுத்துகின்றன. அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை. புவிசார் குறியீடு கூட இதற்கு கிடைத்திருக்கிறது. கலாசார பரிசினை எனக்கு அனுப்பியமைக்கு நான் தஞ்சாவூர் சுய உதவி குழுவிற்கு சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது பெண்களின் அதிகார பங்களிப்பின் புதிய பாதை.
தஞ்சாவூர் பெண்களுடைய சுய உதவிக்குழுக்கள் ஒரு அங்காடியும் ஒரு சிறுகடையையும் திறந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிறு கடை அங்காடி வாயிலாக தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் இந்த பெண்களால் நேரடியாக கொண்டுசேர்க்க முடிகிறது. இந்த முயற்சிக்கு ’தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த முயற்சியோடு 22 சுய உதவி குழுக்கள் இணைந்து இருக்கின்றன என்பதுதான். இந்த மகளிர் சுய உதவி குழுக்களை பெண்களின் சுய சேவை சமூகமே நடத்தும்.
இந்த அங்காடியை தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலேயே திறந்திருக்கிறார்கள். இதன் பராமரிப்பு பொறுப்பு முழுவதையுமே கூட இந்த பெண்களை நடத்துகிறார்கள். இந்த பெண்கள் சுய உதவிக்குழு தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீடு பொருட்களைத் தவிர பிற பொம்மைகள், வெண்கல விளக்கு ஆகியவற்றையும் கூட தயாரிக்கிறார்கள். ஒரு கடையின் மூலம் புவிசார் குறியீடு கைவினைப் பொருட்களின் விற்பனையில் கணிசமான முன்னேற்றம் கிடைக்கிறது. நமது தேசத்தில் பல்வேறு மொழிகள் எழுத்து வடிவங்கள், வழக்கு மொழிகள் என இது ஒரு நிறைவான பொக்கிஷம்.
பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆடைகள், உணவு முறைகள், கலாசாரம் இவையே நமது அடையாளம். இந்த பன்முகத்தன்மை, இந்த வேற்றுமை ஒரு தேசம் என்ற வகையில் நம்மை மேலும் ஆற்றல் படைத்தவர்களாக ஆக்குவதோடு இணைத்து வைக்கிறது. அடுத்த மாதம் 21-ஆம் தேதியன்று நாம் 8-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த முறை யோகக்கலை தினத்தின் மையக்கரு, மனித சமூகத்துக்காக யோகக்கலை என்பதே. யோகா தினத்தை மிகுந்த உற்சாகத்தோடு நீங்கள் கொண்டாடுங்கள் எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM