கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் தெரித்ததாவது,
கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், 30, 31,1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.