சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று (மே 28) வரை நீடித்தது. கத்திரி வெயில் தொடங்கியதும் அசானி புயல் உருவானதால், சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இனி வரும் நாட்களில் வெயில் தனிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வெப்பச் சலனம் காரணமாக மே 29-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 30, 31, ஜூன் 1-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும். மே 28-ம் தேதி (நேற்று) சேலம் மாவட்டம் வீரகனூர், கடலூர் மாவட்டம் வேப்பூரில் தலா 5 செ.மீ., கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னம், கோவை மாவட்டம் வால்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வரும் 29, 30-ம் தேதிகளில் லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல், தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.