தமிழகத்தில் குரங்கம்மை நோயை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி- ராதாகிருஷ்ணன்

திருச்சி:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருண்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு படுக்கையும் தலா ரூ.2.90 லட்சம் மதிப்பில் என மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளதை பார்வையிட்டார்.

மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு ஓமைக்ரான் அதிவேகமாக பரவி வந்தது. டெல்லியிலும் நோய் தாக்கம் ஏற்றம் அடைய தொடங்கியிருக்கிறதே தவிர குறையவில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 22 என்ற அளவிற்கு மிக குறைந்த அளவில் நோய் தொற்று பதிவானது.

தற்போது கொஞ்சம் அதிகமாக தொடங்கி இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா மூன்று அலைகளையும் நாம் முழுமையாக வென்றிருக்கிறோம். தற்போது கரை ஒதுங்கும் நேரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. கல்லூரி மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 234 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் கல்லூரி நிர்வாகம் அளித்தது. அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதுவும் சரி செய்யப்பட்டது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடியவர்கள் கல்யாண நிகழ்ச்சி, சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் கலந்து கொள்ளும் பொழுது அதிகமான நபருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.

மார்ச் 17-ந்தேதிக்கு பிறகு இறப்பு எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் மீண்டும் தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் எச்சரித்து உள்ளோம். பொதுவாக எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

93 சதவீதம் பேர் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியுள்ளார்கள். 80 சதவீதம் பேர் இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது தவணை தடுப்பூசி 1.21 கோடி பேர் போட்டுள்ளனர். உலக அளவில் குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் பரவி வந்தாலும் தமிழகத்தில் இன்னும் இல்லை. ஆனால் இந்தியாவில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். குரங்கம்மை அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக டாக்டர்களை அணுகவேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பாதுகாப்பாக வரவேண்டும். தமிழகத்தில் 100-க்கும் கீழ் பாதிப்பு இருக்கிறது. பொது மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிவது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமாக இருக்கவேண்டும். கொரோனா பரிசோதனையையும் தீவிரப்படுத்த இருக்கிறோம். ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு இருக்கிறது.

பயோமெட்ரிக் முறையை படிப்படியாக அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்த இருக்கிறோம். தவறுகள் செய்யும் டாக்டர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும். காப்பீட்டு திட்டத்தில் 46 சதவீதம் அரசு மருத்துவமனையில் சலுகைகள் வழங்கப்படுகிறது. இண்டர்நெட் அடிக்சன் மையம் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.

ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி இல்லாமல் இருக்கிறது அதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் முறைகேடுகள் நடந்தால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு கட்டாயமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.