தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி வனஜா (வயது27). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்தார்.
இதில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிய சிலர் உதவியை நாடினார்.
அப்போது ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணை வைத்து தொடர்பு கொண்டபோது மறுமுனையில் இருந்து பேசிய நபர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே அழைத்தார்.
தருமபுரியில் அவர்கள் கூறிய இடத்திற்கு வந்த வனஜாவை சில இடைத்தரகர்கள் நேரில் வந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் ஒரு வீட்டில் வைத்திருந்த ஸ்கேனிங் மூலம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் மூலம் கருவில் இருக்கும் குழந்தை பெண் என கண்டுபிடித்து அதனை கருகலைப்பு செய்துள்ளனர்.
இதில் கருக்கலைப்பு முழுமை அடையாததால் தனி காரில் அழைத்துச்சென்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்து சிகிச்சை பெற்று வரும் வனஜா கொடுத்த தகவலை அடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கருக்கலைப்பு கும்பலை பிடிக்க போலீசார் வலை விரித்து கண்காணிக்கத் தொடங்கினர்.
இது தொடர்பாக தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழி மூலமாகவும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.