கேரளாவில் பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
கேரளாவின் எடவா ஊரை சேர்ந்தவர் பஷீர். பிரபல பாடகரான இவர், ஆரம்ப காலத்தில் ஜேசுதாஸ் மற்றும் ரஃபி பாடல்களை கேட்டு பயிற்சி பெற தொடங்கினார்.
அதன் பின்னர் மலையாளத்தில் பிரபல பின்னணி பாடகராக உயர்ந்தார். அத்துடன் கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில், ஆலப்புழாவில் உள்ள பத்திரப்பள்ளியில் ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பஷீர், பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடலை ரசித்து பாடிக்கொண்டிருந்தார்.
அந்த பாடலை அவர் பாடி முடித்ததும் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எடவா பஷீரின் உடல் அவரது சொந்த ஊரான கொல்லம் கடப்பாக்கடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது மறைவுக்கு திரையுலகினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாடகர் எடவா பஷீருக்கு எனது அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
ഗായകൻ ഇടവാ ബഷീർക്കയ്ക്ക് ആദരാഞ്ജലികൾ. ആത്മാവിന് നിത്യശാന്തി നേരുന്നു 🙏#EdavaBasheer #KSChithra pic.twitter.com/92nzFqFx3h
— K S Chithra (@KSChithra) May 29, 2022