கோடை விடுமுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் திருமலையில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு அந்தக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாகக் கடந்த இரண்டு தினங்களாக பக்தர்கள் திருமலை திருப்பதியில் குவிந்துவருகின்றனர். இதனால் ஐந்து கிலோ மீட்டர் நீளமான வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.
பொதுவாக வைகுண்ட ஏகாதசி மற்றும் கருடசேவை நாள்களில்தான் திருமலையில் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். ஆனால் கடந்த இரண்டு நாள்களிலும் அதைவிட அதிகமான அளவில் பக்தர்கள் குவிந்திருப்பதால் தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 4,500 நபர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு நாளைக்கு எழுபதாயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துவந்தனர். திடீரென்று லட்சக்கணக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அங்கே ஓர் அசாதாராண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.
28.5.2022 அன்று 89,318 பேர் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 48,539 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 3.76 கோடி ரூபாய் உண்டியல் வசூல் ஆனது. 29 கம்பார்ட்மென்ட்களில் பக்தர்கள் காத்திருந்தனர்.
தேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் தயார் செய்து விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் வி.ஐ.பி பக்தர்கள் மற்றும் சாதாரண பக்தர்கள் திருப்பதிக்கு வரும்முன் திட்டமிட்டுக் கொண்டு வரும்படி தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது. திருமலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தரிசனம் செய்யுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.