திருப்பதி : திருமலையில் வார இறுதி விடுமுறையை ஒட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால், தரிசனத்துக்காக பக்தர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. வார இறுதி நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று 3 – 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தர்ம தரிசன பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்க துவங்கினர். காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமானதால், வரிசை தொடர்ந்து நீண்டது. 10 மணி நேர காத்திருப்புக்குப் பின் தான், இவர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், மோர் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் மட்டும், 89 ஆயிரத்து 318 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
48 ஆயிரத்து 539 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை 3.76 கோடி ரூபாய் வசூலானது. திருமலை ஏழுமலையானை, மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று காலை வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் வழிபட்டார்.
Advertisement