சென்னை: கடந்த வாரம் அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளதால், கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கடந்த 20ம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கேற்ப கடந்த 26ம் தேதி தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டது. அதன் அறிகுறியாக தற்போது கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும், மாகே, லட்சத்தீவு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி, பகுதிகளில் 5 நாட்களுக்கு மழை பெய்யும். மேலும், இன்று தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அரபிக் கடலில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். தெற்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.