நீட் தேர்வுக்கு எதிர்ப்பு; விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 3 ஆம் இடம்

NEET exam 2022 Tamilnadu is third in applications: தமிழகத்தை ஆளும் தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வந்தாலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நீட் தேர்வுக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தி.மு.க.,வின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய நிலையை தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 1,42,286 ஆக உள்ளது. இது 2021ஆம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகம். மேலும், தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டான 2019ல் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையான 1.4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்: மாநில கல்விக் கொள்கை: அறிவிப்போடு சரி; இன்னும் அரசாணை வரவில்லை!

இதனையடுத்து இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன.

தற்போதைய நிலையில், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் விண்ணப்பிப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வை வைத்து அரசியல் விளையாடுவதை தவிர்த்து, மாணவர்களை நீட் தேர்வுக்கு தமிழக அரசு தயார்படுத்த வேண்டும். மேலும், தமிழக அரசு அரசு பள்ளிகள் மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.