ஆலப்புழா : கேரளாவில், ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ நடத்திய பேரணியில், பிரிவினையை துாண்டும் கோஷம் எழுப்பப்பட்ட விவகாரம் மற்றும் நீதிபதிகளை அவதுாறாக பேசியது தொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சர்ச்சை
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஆலப்புழா மாவட்டத்தில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா கட்சியினர் சமீபத்தில் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது, தன் தந்தையின் தோள் மீது அமர்ந்து சென்ற சிறுவன், மதப் பிரிவினையை துாண்டும் விதமாக சர்ச்சைக்குரிய கோஷங்களை எழுப்பினான். இந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, கோஷம் எழுப்பிய சிறுவனின் தந்தை ஆனஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிவினையை துாண்டும் கோஷங்களை எழுப்பிய பாப்புலர் பிரன்ட் அமைப்பின் மீது, கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்குப் பதிவு
இதையடுத்து, பேரணிக்கு ஏற்பாடு செய்த பாப்புலர் பிரன்ட் அமைப்பின் ஆலப்புழா மாவட்ட செயலர் முஜீப் மற்றும் நவாஸ் ஆகியோர் மீது, போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.நீதிபதிகளின் உத்தரவு குறித்து, பாப்புலர் பிரன்ட் அமைப்பின் பிரமுகர் யாஹ்யா தங்கல் என்பவர் அவதுாறான கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Advertisement