பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது…
நோய்த்தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் பணி செய்கிறார்களா என்பதை அரசு பொது மருத்துவமனை முதல்வர் கண்காணிப்பார். மேலும் மருத்துவர்கள் பணி செய்வதை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு சில மருத்துவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட்டு, அத்தகைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளின் தேவைக்கு ஏற்ப, வருங்காலங்களில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும்.
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, காஞ்சிபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. அதனை அமைப்பதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மத்திய அரசும் அதற்காக பரிசீலித்து வருகிறது.
மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM