இன்று காலை பாதுகாப்புப் படையினர் ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியில் உள்ள தெல்லி ஹரியா சக் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகப் பாகிஸ்தான் எல்லையிலிருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் வருவதை அவர்கள் கண்டனர். உடனே அதனைச் சுட்டு வீழ்த்தினர். அந்த டிரோனில் 7 வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. சரியான நேரத்தில் அந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்படாமல் போயிருந்தால், வெடிகுண்டுகள் தீவிரவாதிகளின் கையில் கிடைத்திருக்கும் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
வரும் 30-ம் தேதி 43 நாள்கள் அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரை தெற்கு காஷ்மீரில் நுன்வான் வழியாகவும், மத்திய காஷ்மீரில் கண்டர்பால் வழியாகவும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. அமர்நாத் யாத்திரையைச் சீர்குலைக்கும் நோக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டுகளை அனுப்பியிருக்கலாம் என்று கதுவா பகுதி போலீஸ் அதிகாரி கோட்வல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் டிரோன்களின் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதோடு அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இப்போதே பாதுகாப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விரைவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், அமர்நாத் யாத்திரிகர்கள் நடுவழியில் சிக்கிக்கொண்டால் அவர்களை மீட்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.