சென்னை:
பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தி.நகரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், ஆலோசனை வழங்கினார். ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி மற்றும் கட்சியின் துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் பற்றி ஆலோசித்தனர்.
முன்னதாக டாக்டர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவராக பொறுப்பேற்றதையொட்டி மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்துள்ளேன். அந்த வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அவரும் மனதார வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். சமூக பிரச்சினைகள் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
முக்கியமாக கிடப்பில் உள்ள நீர் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.