மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நாணயச் சபை உறுப்பினர் திரு. சஞ்சீவ ஜயவர்தன ஆகியோருடன் நேற்று (28) கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
நியமனம் பெற்று குறுகிய காலத்திற்குள் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் திரு. நந்தலால் வீரசிங்க அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பாராட்டைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, பொருளாதார துறை நிபுணர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் வெற்றிகரமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக திரு.வீரசிங்க அவர்கள் தெரிவித்தார்.
- நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்த குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை…
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை திரு.வீரசிங்க அவர்கள் விளக்கினார்.
எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, அவ்வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகளால் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார். திரு.நந்தலால் வீரசிங்க அவர்கள் உள்ளிட்ட நாணய சபை, சர்வதேச ரீதியாக முன்னெடுத்துவரும் செயற்பாடுகளின் வெற்றிக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் அரச தலைவர்கள் மட்டத்தில் பங்களிப்புச் செய்ய தயார் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
29.05.2022