கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணி விக்டோரியா நினைவாக டவுன்ஹாலில் கோவை மாநகராட்சி மன்றம் 1892-ல் கட்டப்பட்டது. இது ஒரு நியோ-பாரம்பரிய நகராட்சி கட்டிடம் ஆகும்.
1887-ல் இக்கட்டிடத்துக்காக சமூக ஆர்வலரும், பத்திரிகையாளருமான எஸ்.பி.நரசிம்மலு நாயுடு ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்து, பொதுமக்களிடம் நிதி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார். நகராட்சி நிர்வாகம் ரூ.3 ஆயிரம் நன்கொடையாக அளித்தது. மொத்தம் ரூ.10 ஆயிரம் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. இப்படி பாரம்பரியமான அந்த கட்டிடத்தில் நேற்றுமுன்தினம் மாநகராட்சி கூட்டம் முடிந்தவுடன் மேற்கு மண்டல தலைவரின் பிறந்தநாளை மேயர் தலைமையில், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது என்ன மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசும் மாமன்றமா அல்லது கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் ஆடம்பர மண்டபமா?
பாரம்பரியம் மிக்க இந்த மாமன்றத்தில் மக்கள் தலைவர்கள் ரத்தினசபாபதி முதலியார், எஸ்.ஆர்.பொன்னுசாமி செட்டியார், நஞ்சப்ப செட்டியார், சுக்கூர் போன்றோர் கோவை மக்களுக்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தியுள்ளனர். இன்று கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் மண்டபமானது மாமன்றம். அன்றைய கூட்டத்திலேயே சொத்துவரியை ஏற்றிவிட்டு, மக்கள் கஷ்டங்களை மறந்துவிட்டு, பிறந்தநாளை கொண்டாடுவதை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.