Tamilnadu state education policy committee remains only on announcement: மாநிலக் கல்விக் கொள்கையை (SEP) உருவாக்குவதற்கான குழுவை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும், அதற்கான செயல்முறையை அந்தக் குழு இன்னும் தொடங்கவில்லை.
தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களான மும்மொழிக் கொள்கை, அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து, மாநிலத்தின் சொந்த கல்விக் கொள்கையை உருவாக்க, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்தக் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான செயல்முறையை அந்தக் குழு இன்னும் தொடங்கவில்லை. ஏனெனில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கம் குறித்து அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை மற்றும் குழு உறுப்பினர்களும் விவரங்களும் வெளியிடப்படவில்லை.
மாநில அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமான துவக்கமானது விதிமுறைகள் மற்றும் குறிப்புகளுடன் கூடிய அரசாணை மூலம் மட்டுமே வர வேண்டும். குழு, அரசு மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைக்கும் நோடல் துறை பற்றியும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும், என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: தனது சிலை இடிக்கப்பட்டபோதும் கவிதை பாடியவர் கருணாநிதி – ஸ்டாலின்
மேலும், குழு செயல்பட மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். பொதுவாக, குழு அமைக்கப்படும் போது, முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அது ஏன் அமைக்கப்பட்டது, அதன் செயல்பாடுகள், குழுவின் அதிகாரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பார்கள். அதன் பிறகு குழு பொறுப்பேற்கும். ஆனால் இந்த செயல்பாடுகள் இதுவரை நடக்கவில்லை. குழுவின் முதல் கூட்டம் இன்னும் நடைபெறவில்லை, என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்த போதிலும், ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைப்பதில் ஒரு வருடம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து மாநில அமைச்சரவை ஆலோசித்து, குழுவிற்கான விதிமுறைகள் மற்றும் குறிப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், 13 பேர் கொண்ட குழுவை விரிவுபடுத்தி, கற்பித்தல் முறை, உள்கட்டமைப்பு, முன் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை நிதி உட்பட கல்வியின் பல்வேறு அம்சங்களில் விரிவான பரிந்துரைகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.