ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக மாற்றப்பட்டன. அதன்படி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரை மையமாக கொண்டு கோணசீமா பகுதி, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் போராட்டம் நடந்து அது வன்முறையாக தற்போது மாறியுள்ளது.
வன்முறையில், ஆந்திர அமைச்சர் விஸ்வரூப் மற்றும் மும்முடிவரம் என்ற பகுதியின் எம்.எல்.ஏ சதீஷ் ஆகியோரின் வீடுகளும், 8 பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன. இவையன்றி பல பொது வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதில் காவல் துறை வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால், தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கலவரத்தில் ஈடுபட்டதாக 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க… சொத்து வரி செலுத்தாத ஹோட்டல்களா?.. பாய்கிறது ஜப்தி நடவடிக்கை!
அமலாபுரம், அம்பாஜிபேட்டை, அல்லாவரம், ஐனப்பள்ளி பகுதிகளை சேர்ந்த 25 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் மேலும் கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஏலூர் சரக டிஐஜி பாலராஜூ பத்திரிகையாளர்களிடையே தெரிவித்துள்ளார். அசம்பாவிதங்களை தவிர்க்க மேலும் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM