சென்னை: முதல்வரின் வீரப்பதக்கம் பெறும் போலீஸாருக்கு, குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கு இணையான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
காவல் துறை சார்பில், 2019, 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது இதில், 319 காவலர்களுக்கு விருதுகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
காவல் துறை மக்களுடன் நெருக்கமானால்தான், குற்றங்கள் குறையும். எனவே, ‘காவல் துறை நம் நண்பன்’ என்று சொல்லத்தக்க வகையில் போலீஸார் செயல்பட வேண்டும்.
காவல் துறையை தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் கருதுகின்றனர். ஆனால், குற்றங்கள் நடக்காத சூழ்நிலைகளை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகிறேன்.
ஒரு காவலர் அல்லது ஒருகாவல்நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஓட்டுமொத்த காவல் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. காவலர்களின் செயல்பாடுகள் துறையை தலைநிமிரச் செய்ய வேண்டுமே தவிர, தலைகுனிவை ஏற்படுத்திவிடக் கூடாது. அத்தகைய எச்சரிக்கை உணர்வு காவலர்கள் அனைவருக்கும் இருந்தால், குற்றச் சம்பவங்களே நடைபெறாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்.
எந்த சூழலிலும் மக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அரசியல், மதம், சாதி காரணமாக வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்த நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் எடுத்துக்காட் டான திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இவற்றுக்கு அமைதிதான் அடிப்படை.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகுதமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. அதற்கு, தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதே காரணம். மக்களைக்காக்கும் கடமை காவலர் களுக்கு இருப்பதைப் போல, காவலர்களைப் பாதுகாக்கம் கடமை அரசுக்கு இருக்கிறது. அதை மனதில் கொண்டு, கடந்த ஓராண்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
புதிய காவல் ஆணையத்தின் அறிக்கை கிடைத்தபிறகு, காவல் துறையினரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
அதேபோல, தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் முதல்வரின் வீரப் பதக்கங்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள், குடியரசுத் தலைவரின் வீரப் பதக்கத்துக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
டிஜிபி சி.சைலேந்திர பாபு வரவேற்றுப் பேசும்போது, ‘‘வாரம் ஒருநாள் விடுப்பு சட்ட வடிவம் பெற்று, காவலர்களின் உரிமையாக மாறியுள்ளது. 1,474 காவலர்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
விழாவில், உள்துறைச் செயலர்எஸ்.கே.பிரபாகர், சிறைத் துறைடிஜிபி சுனில்குமார் சிங், தீயணைப்புத் துறை டிஜிபி பிராஜ் கிஷோர், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.