முருங்கைக்காய் சூப் I முருங்கை கறி I முருங்கையிலைத் தட்டை – முருங்கை ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இலை, பூ, காய், விதை என முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. வருடம் முழுக்க எல்லா நாள்களிலும் கிடைக்கக்கூடிய முருங்கையை வாரத்தில் ஒருநாள் சேர்த்துக்கொள்வதே அபூர்வமாக இருக்கிறது பல குடும்பங்களில். `முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல்… முருங்கையில வேற என்ன செய்துட முடியும்’ என அலுத்துக்கொள்பவர்களுக்கு சூப் முதல் தட்டை வரை விருந்தே வைக்கும்படியான வெரைட்டி ரெசிப்பிகளைத் தொகுத்துள்ளோம் இங்கே.

செடி முருங்கை

இந்த வார வீக் எண்டில் உங்கள் வீடு முருங்கையால் மணக்கட்டும்.

முருங்கைக்காய் சூப்

தேவையானவை:

முருங்கைக்காய் – ஒரு கப் (2 இன்ச் துண்டுகளாக நறுக்கியது)

வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)

உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி நறுக்கவும்)

காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

முருங்கைக்காய் சூப்

செய்முறை:

குக்கரில் வெண்ணெய்விட்டு சூடாக்கி முருங்கைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் கலவையை எடுத்து உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் (கத்தியால் வழித்தெடுத்தெடுத்த சதைப் பகுதி மட்டும்) ஆகியவற்றுடன் பால், ஒன்றரை கப் தண்ணீர் கலந்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, வடிகட்டியால் வடிகட்டவும்.

அடி ஆழமான நான்-ஸ்டிக் பானில் (pan) வடிகட்டிய கலவையுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும் (இடையிடையே கிளறவும்).

சூப்பை சூடாகப் பரிமாறவும்.

முருங்கைக்காய் கறி

தேவையானவை:

முருங்கைக்காய் – 4

உருளைக்கிழங்கு – 2

வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)

பூண்டு – 4 – 5 பல்

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

தக்காளி – ஒன்று

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

கடுகு – அரை டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

முருங்கைக்காய் கறி

செய்முறை:

தக்காளி, பூண்டு, தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய முருங்கைக்காய், தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்குடன் சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தனியே வைக்கவும். வேகவைத்த தண்ணீரைக் கொட்டிவிட வேண்டாம்.

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். பிறகு உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மீதமுள்ள மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். பச்சை வாசனை போய், மசாலா ரெடியானதும் வேகவைத்த முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்க்கவும். வேகவைத்த தண்ணீரையும் தேவையான அளவு சேர்க்கவும். மூடிபோட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். கிரேவி மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது; மிகவும் நீர்த்தும் இருக்கக் கூடாது. அந்தப் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.

முருங்கைக்காய் ரசம்

தேவையானவை:

முருங்கைக்காய் – ஒன்று

துவரம்பருப்பு – அரை கப்

தக்காளி – 2

புளி – சிறிய எலுமிச்சை அளவு

பச்சை மிளகாய் – ஒன்று

ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன்

நெய் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

முருங்கைக்காய் ரசம்

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து 5 விசில் வரை வேகவைக்கவும். புளியை வெந்நீரில் ஊறவைக்கவும். முருங்கைக்காயைக் கழுவி, 1 – 2 இன்ச் நீளத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். தக்காளி மென்மையானதும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு, மூடி போட்டு சில நிமிடங்கள் வேகவிடவும். இப்போது ஒரு கப் தண்ணீர் சேர்த்து முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விடவும். புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து, வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ரசப்பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து, தேவையான நீர்விட்டு கடாயை பாதி அளவு மூடியால் மூடி கொதிக்க விடவும். ரசம் கொதிக்கும்போதே மற்றொரு கடாயில் எண்ணெய், நெய்விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து, வெடித்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். தாளிப்பை ரசத்தில் சேர்த்து இறக்கவும்.

முருங்கையிலைத் தட்டை

தேவையானவை:

சுத்தம் செய்த முருங்கையிலை – கால் கப்

அரிசி மாவு – ஒரு கப்

உளுத்த மாவு (வறுத்து அரைத்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

முருங்கையிலை தட்டை

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்க்கவும். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய பூரி வடிவில் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டைகளைப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.