பெங்களூரு : கர்நாடக சட்டமேலவையின், தெற்கு பட்டதாரிகள் தொகுதி தேர்தலுக்கு, 20 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகளை, சுயேட்சைகள், சிறு, சிறு கட்சிகள் அச்சுறுத்துகின்றன.சட்டமேலவையின், தெற்கு பட்டதாரி தொகுதிக்கு, இதற்கு முன் நடந்த தேர்தல்களில், மூன்று முக்கிய கட்சிகள் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., இடையே போட்டி இருந்தது.
ஆனால் இம்முறை தேர்தலில், சிறு, சிறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருப்பது, மூன்று கட்சிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு பட்டதாரி தொகுதியில், 1.37 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இம்முறை ஸ்வராஜ் கட்சி, டி.எஸ்.எஸ்., உட்பட 17க்கும் மேற்பட்ட சங்கங்களின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விவசாயிகள் சங்க ஆதரவு பெற்ற பிரசன்னா கவுடாவும், களத்தில் இருக்கிறார்.தலித்துகள், ஒக்கலிகர் ஓட்டுகளை குறி வைத்து, விவசாய சங்கம் செயல்படுகிறது. தலித், பிற்படுத்தப்பட்ட சமுதாய ஓட்டுகளை எதிர்ப்பார்த்து, சென்னகேசவ மூர்த்திக்கு, பகுஜன் சமாஜ் ஆதரவளிக்கிறது.சிறுபான்மையின, தலித் பட்டதாரிகளை ஒருங்கிணைக்க, எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ரபத் உல்லாகானை களமிறக்கியுள்ளது. இதனால் தங்களின் ஓட்டு வங்கி குறையுமோ என, காங்கிரஸ், ம.ஜ.த., அஞ்சுகின்றன.தற்போதைய எம்.எல்.சி., மரிதிப்பேகவுடா, ம.ஜ.த., வேட்பாளர் ராமுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது ம.ஜ.த.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த வினய், தேர்தலில் போட்டியிடுவது, பா.ஜ., தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் போட்டோவை போடாததால், சில வாக்காளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தற்போது மூன்று முக்கிய அரசியல் கட்சிகளான, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தங்களின் வேட்பாளர்களின் வெற்றிக்காக, பட்டதாரி வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க திட்டமிட்டுள்ளனர்.