லண்டனில் காதலித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு லண்டனின் கிளாபம் மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே கடந்த 2020 டிசம்பர் 27ம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தின் போது அசாரியா வில்லியம்ஸ்(26) மற்றும் அவரது காதலன் மார்க் அலெக்சாண்டர்(29) ஆகிய இருவரும் Sainsbury-கு சென்று சிகரெட் மற்றும் கர்ப்ப பரிசோதனை கருவி வாங்க சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் அசாரியா வில்லியம்ஸ் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர். 30 நிமிடங்களுக்கு பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இரவு 9 மணி கடந்த நிலையில், அசாரியா வில்லியம்ஸ் குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்க, அண்டை வீட்டார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அசாரியா வில்லியம்ஸ் உடலை கைப்பற்றியுள்ளனர்.
உடற்கூராய்வில் அசாரியா வில்லியம்ஸ் உடலில் 98 கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், கத்தி ஒன்று உடைந்து அவரது உடலுக்குள் இருந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில் மார்க் அலெக்சாண்டர் உளவியல் பாதிப்பு கொண்டவர் எனவும், கொலை செய்வதற்கு முன்னர் அவர் மருந்து எடுத்துக்கொள்ளவில்லை எனவும் தெரிய வந்தது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மது அருந்துவதற்காக அவர் மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
அசாரியா வில்லியம்ஸ் தம்மை ஏமாற்றி இன்னொருவரை காதலிப்பது தமக்கு தெரிய வந்தது எனவும்,
தங்களின் இரண்டரை ஆண்டு கால காதல் முடிவு வருவதை தம்மால் தாங்க முடியவில்லை எனவும், அதனாலையே கொலை செய்ததாக மார்க் அலெக்சாண்டர் கூறியது கட்டுக்கதை என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து, மார்க் அலெக்சாண்டருக்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓல்ட் பெய்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.