ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர், கடலில் பாசி சேகரிக்கச் சென்றபோது அங்கே இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஆறு வடமாநில இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களைக் கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வடமாநில இளைஞர்களை மாவட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை ராமநாதபுரம் முழுவதும் வலுப்பெற்றிருக்கிறது.
இதன் எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கட்டட வேலை செய்பவர்கள், பானிபூரி, குல்பி ஐஸ் விற்பனை செய்பவர்கள், ஹோட்டல், இறால் பண்ணைகளில் பணிபுரிபவர்கள் என மாவட்டத்தில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த முழுமையான விவரங்களை அவர்களை அழைத்து வந்திருக்கும் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் உடனடியாக அந்தந்த நகராட்சிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி ஆகிய நான்கு நகராட்சிகள் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. “இந்த விவரங்களின் நகல்கள் அனைத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
அதில் குற்றப்பின்னணி உள்ள வடமாநிலத்தவர்களாக இருந்தாலோ, அல்லது தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தாலோ அவர்கள் சம்பந்தப்பட்ட மாநில காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுவார்கள்” என ராமநாதபுரம் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.