புதுச்சேரி : ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில், பொது அறிவு குறுந்தேர்வில் அசத்திய நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளி மாணவர் அஜீத்குமார் லேப்டாப் பரிசாக வென்றார்.
புதுச்சேரி ஜெயராம் கல்யாண மண்டபத்தில் ‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதில், கருத்தரங்கில் கேட்கப்படும் குறுந்தேர்வு கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ஒரு லேப்டாப், 2 டேப்லெட், 10 வாட்சுகள் பரிசாக வழங்கப்படுகிறது.நேற்று மாலையில் நடந்த அமர்வில், குறுந்தேர்வு வினாவிற்கு, லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர் வீதியில் வசித்து வரும், நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளி மாணவர் அஜீத்குமார்,17, பதிலளித்து, முதலிடம் பிடித்தார். அவருக்கு ‘லேப்டாப்’ பரிசாக வழங்கப்பட்டது.
மாணவர் அஜீத்குமாரின், தந்தை ராஜசேகரன், 50, சைக்கிளில் சென்று டீ விற்று வருகிறார். தாயார் காளீஸ்வரி,48.மாணவர் அஜீத்குமார் கூறும்போது,
‘பிளஸ் 2 தேர்வினை நன்றாக எழுதியுள்ளேன். பயோ டெக்னாலஜி உள்பட உயிரியல் சார்ந்த படிப்பு படிக்க விருப்பம்.’தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உயிரியல் பாடப்பிரிவில் எத்தனை வகையான படிப்புகள் உள்ளன, அவற்றை எங்கு படிக்க முடியும் என்ற தகவல்கள் முழுமையாக கிடைத்தது. பொது அறிவு குறுந்தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு லேப்டாப் முதல் பரிசாக வென்றதன் மூலம், எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.
Advertisement