வழக்கம்போல் பயன்படுத்தலாம்… ஆதார் அறிவுறுத்தலை திரும்ப பெற்றது மத்திய அரசு

புதுடெல்லி:
ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால், ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. 
“ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதார் கார்டுகளின் நகல்களை சேகரிக்கவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை. எனவே, தனியார் நிறுவனம் உங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என்று கூறினாலோ, அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலைப் பெற விரும்பினாலோ, ஆதார் ஆணையத்திடம் இருந்து சரியான உரிமம் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவேண்டும். 
பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது மையங்களல் இ-ஆதார் டவுன்லோடு செய்வதை தவிர்க்கவேண்டும். அப்படியே டவுன்லோடு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டால், தேவையான நகல் எடுத்ததும், கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்ததை நகலை நிரந்தரமாக டெலிட் செய்துவிடவேண்டும். ஆதார் கார்டு நகலை சமர்ப்பிப்பதற்கு பதிவாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் ‘மாஸ்க் ஆதார் கார்டை’ (masked Aadhaar card) பயன்படுத்தலாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த செய்தி இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், தகவல் திருட்டு தொடர்பாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன. டுவிட்டரில் ஆதார் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. ஏற்கனவே ஆதார் நகலை பல இடங்களில் கொடுத்துள்ள நிலையில், இப்போது இப்படி சொல்கிறார்களே, என பலர் கூறி உள்ளனர். 
இதனையடுத்து, மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. 
ஆதார் ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், இந்த சுற்றறிக்கையின் மூலம் தவறான புரிதலுக்கும், தவறாக விளக்கம் அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக திரும்பப் பெறுவதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் (சாதாரண எச்சரிக்கையுடன்) பயன்படுத்தலாம் எனவும் கூறி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.