கொல்கத்தா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா -வங்கதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்கியது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமானதால், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், இந்தியா – வங்கதேசம் இடையேயான பந்தன் எக்ஸ்பிரஸ், மைத்ரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில இடங்களில் தொடங்கி உள்ளன. வங்கதேசத்துக்கான பயணிகள் ரயில் சேவை மே 29 (நேற்று) முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தில் உள்ள குல்னாவுக்கு பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.இது குறித்து கிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் சக்ரவர்த்தி கூறுகையில், ‘‘இன்று காலை 7.10 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து பந்தன் எக்ஸ்பிரஸ் வங்கதேசம் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் வாரத்துக்கு 2 முறையும், கொல்கத்தா – தாகா இடையிலான மைத்ரி எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 5 முறையும் இயக்கப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து சுற்றுலா, மருத்துவம் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வற்காக பயணிகள் வருகின்றனர். மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட்டு உள்ளதால் இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு ரயிலில் உள்ள அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன,’’ என்றார்.