4 இந்தியர்கள் உட்பட 22 பேருடன் இன்று காலை புறப்பட்ட நேபாள விமானம் திடீரென மாயமாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாள் நாட்டின் பொக்காரா நகரில் இருந்து ஜோம்சோம் நகருக்கு ‘தாரா ஏர்’ நிறுவனத்தின் இரட்டை இஞ்சின் விமானம் இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் இருந்தனர். மற்ற அனைவரும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை தவிர மூன்று விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஜோம்சோமின் முஸ்டாங் மாவட்டத்துக்கு மேலே விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் விமானியை பல முறை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் விமானியின் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட விமானம் காணாமல் போனதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. விமானத்தை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM