சென்னை: தமிழகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக விளங்கியவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றுப் பேசும்போது, “திராவிட இயக்கத்தை 50 ஆண்டுகாலம் தனது தோளில் சுமந்தவர் கருணாநிதி. இந்த நாள் நமக்கெல்லாம் பெருநாள். ஒரு பக்கத்திலே மகிழ்ச்சி நாள். மறுபக்கத்திலே கருணாநிதி சிலையைப் பார்த்தபோது நெஞ்சம் உருகிவிட்டது. காரணம் நம்மிடம் நேரில் பேசுவதுபோலவே அந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை. இத்தகைய நிலையை முதல்வர்தான் உருவாக்கித் தந்துள்ளார். அவர்தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார். காமராஜர், நேரு, பெரியார், கருணாநிதி, அண்ணா என்று ஒரே வரிசையில் இப்போது சிலை அமைந்துள்ளது. இந்த சிலையைத் திறந்துவைத்துள்ள குடியரசு துணைத் தலைவரின் பெயர், இந்த சிலை இருக்கும் வரை அண்ணா சாலையில் நிலைக்கும்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டை, தமிழ் இனத்தை, தமிழ் நிலத்தை வானுயரத்துக்கு உயர்த்தியவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவருக்கு நமது நன்றியை தெரிவிக்க இந்த மாபெரும் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தந்தை பெரியார் சிலைக்கும், பேரறிஞர் அண்ணா சிலைக்கும் இடையில் அமைந்துள்ளது.
கனவுக் கோட்டை
கருணாநிதியால் இந்த ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மாபெரும் கட்டிடம். தமிழ்நாடு சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது மருத்துவமனையாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அது கம்பீரமாக கருணாநிதியின் கனவுக் கோட்டையாகவே எழுந்து நின்றது. அதில்தான் அவரது சிலை எழுப்பப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிகுந்த விழாவுக்கு மகுடம் வைப்பதுபோல் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்துள்ளார்.
2001-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளர்களால் கருணாநிதி மிகக்கொடூரமாக கைது செய்யப்பட்டபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனும், பிரதமராக இருந்த வாஜ்பாயும் துடிதுடித்து போனார்கள். அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்து விமர்சித்தவர்தான் வெங்கய்ய நாயுடு. அந்த நட்பை இன்றுவரை தொடர்பவராக அவர் உள்ளார். அவர் மிக உயர்ந்த பதவியில் இருக்கும்போது கருணாநிதியின் சிலையை திறந்து வைத்திருப்பது இன்னும் பெருமைக்குரிய நிகழ்வாக நடந்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் இங்கே வந்து திறந்துள்ளார். தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்து இந்த நவீன தமிழகத்தை உருவாக்கியவரும் அவர்தான். அத்தகைய மாமனிதருக்குத்தான் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
நவீனத் தமிழ்நாட்டின் தந்தை
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் கோலோச்சியவர். ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 50 ஆண்டுகள் அதை வழிநடத்திய ஒரே தலைவர். தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அதனால்தான் அவரை ‘நவீனத் தமிழ்நாட்டின் தந்தை’ என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறோம். தாய்த் திருநாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் நலத் திட்டங்கள் மூலமாக கோடிக்கணக்கானவர்களுக்கு பயனளித்தவான் போற்றும் வள்ளல்தான் கருணாநிதி. அந்த வகையில், அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்குத்தான் இன்றைய நாளில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தலைவர் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.