சென்னை: சென்னையில் 3 தலைவர்களுக்கு சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அத்துடன், கடற்கரையில் உள்ள காந்தி சிலையை ஔவையார் சிலைக்கு அருகில் இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பா.சுப்பராயன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கவும், காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா சுப்பராயன் சிலை அமைக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கவும் அனுமதி அளிக்கக் கோரி செய்தி மக்கள் தொடர்பு துறை துணைச் செயலாளர் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட இடங்களில் 3 சிலைகளை வைக்க அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைத்தற்கும், பத்மாவதி நகர் பிரதான சாலையை சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்ததற்கும், மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை ஔவையார் சிலை அருகே இடமாற்றம் செய்வதற்கும் சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.