ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் 7 காந்த வெடிகுண்டுகள், 7 பேரல் லாஞ்சர் குண்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன.
பாகிஸ்தானிலிருந்து ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட ட்ரோனில் 7 காந்த வகை வெடிகுண்டுகள் மற்றும் 7 பேரல் லாஞ்சர்மூலம் ஏவும் குண்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. இந்த ட்ரோனை காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் தாலி ஹரியா சாக் என்ற இடத்தில் போலீஸார் நேற்று சுட்டு வீழ்த்தினர்.
இந்த ட்ரோனை, வெடிகுண்டு பிரிவு போலீசார் சோதனை செய்தபோது, அதில் 7 காந்த வெடி குண்டுகள், 7 பேரல் லாஞ்சர் மூலம் ஏவும் குண்டுகள் இருந்தன என ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங் கூறினார்.
கதுவா எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அடிக்கடி பறப்பதால், இங்கு போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவர். தற்போது சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் வெடிகுண்டுகள் இருந்ததால்,இன்று தொடங்கும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
43 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை இரண்டு வழித்தடங்களில் இன்று தொடங்குகிறது. இந்த நேரத்தில், பாகிஸ்தான் எல்லை அருகே வெடிகுண்டுகளுடன் கூடிய ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அமர்நாத் யாத்திரை வழித்தடமான தெற்கு காஷ்மீரின் நுன்வன், மத்திய காஷ்மீர்கந்தர்பால் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.