சென்னை: சென்னையில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக சிபிஎம் தவிர்த்து ஒரு கட்சி கூட தங்களின் ஆட்சேபனைகளை சென்னை மாநகராட்சியிடம் தெரிவிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தன. சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்றது.
இதன்படி சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில், இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பான ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை / 600003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி 39 பேர் தங்களின் ஆட்சேபனைகளைத் தெரிவித்து மனுக்களை அளித்து இருந்தனர். இதில் பெரும்பாலான ஆட்சேபனைகள் குடியிருபோர் நலச்சங்களிடம் இருந்து வந்துள்ளது. அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வட சென்னை மாவட்டக் குழு சார்பில் ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டு இருந்தது. இதைத் தவிர்த்து 163-வயது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி ஜெகதீஸ்வன் ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். இதைத் தவிர்த்து எந்த அரசியல் கட்சியும் சொத்து உயர்வு குறித்து தங்களின் ஆட்சேபனைகளை அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த ஆட்சேபனைகளுக்கு பதில் அளித்தும், சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.