ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த தாலிபன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி இந்தியா குறித்து பேசியிருந்தார்.
இது தொடர்பாக அவர், “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம், அரசியல், கல்வி, மனித உரிமைகள் போன்றவற்றை வேறு கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். சர்வதேச அளவிலுள்ள ஆப்கானிஸ்தானின் எதிரிகளால் முன்னிறுத்தப்படும் ஆப்கானிஸ்தானைப் பார்க்க வேண்டாம்.
முழு உலகத்துடன் குறிப்பாக இந்தியாவுடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்களில் சுமுகமான உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் இந்தியாவை நோக்கி நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளோம், மேலும் எங்கள் குடிமக்கள் மருத்துவச் சிகிச்சை பெறவும், எங்கள் தொழிலதிபர்கள் இந்தியாவுக்குச் செல்லவும் விமானப் பாதை திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். 2001-ல் ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, போதைப்பொருள் உற்பத்தி ஆப்கானிஸ்தானில் பூஜ்ஜிய அளவிலிருந்தது. அதன் பிறகு, 20 ஆண்டுக்கால அமெரிக்க ஆட்சியில், இந்தியா உட்பட மற்ற அண்டை நாடுகளுக்கும் போதைப்பொருள் அனுப்பப்பட்டது. இப்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் போதைப்பொருள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, கடந்த ஒன்பது மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்குக் கோதுமை மற்றும் பிற பொருள்களை அனுப்பி உதவிசெய்திருக்கிறது. அதற்காக நாங்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுடைய புதிய அரசின் தகவலாக நாங்கள் யாருடனும் பகையை விரும்பவில்லை என்ற செய்தியை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.