ரஜினி படம் என்பது இன்று தமிழ் நாட்டில் தீபாவளிப் பண்டிகைக்குச் சமம் .
தீபாவளியாவது வருடத்துக்கு ஒருமுறை வரும். ‘படையப்பா’ – இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரிலீஸாகப் போகிற ரஜினி படம் .
‘இதுதான் ரஜினி நடிக்கும் கடைசிப் படம்’ – என்கிற வதந்தி ஒருபக்கம் உலவிக்கொண்டிருக்க , அரசியலுக்கு யெஸ் / நோ இரண்டில் ஒன்றை ரஜினி சொல்வதற்கு அநேகமாக இதுதான் அவருக்குக் கடைசி வாய்ப்பு என்றும் சொல்கிறார்கள் .
பரபரவென ‘படையப்பா’ ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும்… அதற்கு ஒரு வாரம் முன்னாலேயே படம் தியேட்டருக்கு வரும் என்று பேச்சு .
“நாலு மாசமா சரியா தூங்கலே சார்” என்று சிவப்பேறிய கண்களில் சிரிக்கிறார் ‘படையப்பா’வின் டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார். ஃப்ரேம் பை ஃப்ரேமாக படையப்பாவைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் ரவிக்குமார் .
“எனக்கு முதல் நாள் நல்லா ஞாபகம் இருக்கு. ‘படையப்பா’னு டைட்டிலைச் – சொல்ல ஒரு பிரஸ்மீட் . ரஜினி சார் பரபரனு வந்தார். ‘படையப்பான்னா படைக்கு அப்பன்னு அர்த்தம். தளபதிக்கு இன்னொரு பேர். அதாவது கமாண்டர் இன் சீஃப் மாதிரி’னு சொல்லிட்டு, ‘இதோ இந்த அண்ணன்தான்’ படையப்பா’ வோட படையப்பா. படம் எப்படி வரணும்னு நல்லாச் சொல்லுங்க’னு என் கையைப் பிடிச்சு நிருபர்கள் முன்னால நிறுத்தினார். அப்போ திகுதிகுனு எனக்குள்ள ஒரு தீ பிடிச்சதுதான்… மொத்தப் படமும் முடிச்சு இதோ ரெண்டு நாள்ல ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாயிடும். ஒரு தடவை போட்டுப் பார்த்து ‘ஓகே’னு தோணுச்சுன்னா போதும்.. அப்புறம் ‘படையப்பா’வை தமிழ்நாடு பார்த்துக்கும்” என்று ரிலாக்ஸாகிறார் ரவிக்குமார்.“
முத்து படம்தான் நான் ரஜினி சாரோட பண்ணின முதல் படம் . அப்போதான் பயங்கர டென்ஷன். அத்வானில ஆரம்பிச்சு நரசிம்மராவ் வரைக்கும் அத்தனை பேரும் ரஜினி சாரைப் பார்த்துட்டிருந்த நேரம். இங்கே தமிழ்நாட் டுல அவரோட பேச்சுதான் பிரளயம் கிளப்பிட்டிருந் தது. ஷூட்டிங் டைம்லகூட கூட்டம் கூட்டமா அரசியல்வாதிகள் வந்துடுவாங்க. அதுக்கு மத்தியில பட வேலைகள். ‘முத்து’ – அந்த நேரத்துல சூப்பர் ஹிட்.
அடுத்த படம் , ‘அருணாச்சலம்’ பண்றப்போ ரஜினி சார் என்னைத்தான் கேட்டார். தேதி இல்லாம நான் பண்ண முடியலை. இப்ப ‘படையப்பா’ ஆரம்பமும் சிரஞ்சீவியோட ‘நட்புக்காக’ – தெலுங்கு ரீமேக்கும் ஒரே நேரத்துல வந்தது. எனக்குத் தர்மசங்கடம். ‘பரவாயில்லே, நான் வெயிட் பண்றேன்’ னு என்னை ஆந்திராவுக்கு அனுப்பிச்சுட்டு ரெண்டு மாசம் காத்திருக்கார் ரஜினி சார். அதுக்காக அவருக்கு நான் நன்றி சொல்லணும் .
அதே நேரத்துல ரசிகர்களுக்கு ஸாரி சொல்லணும். ஏன்னா… அதுமட்டும் இல்லேன்னா ‘படையப்பா’ பொங்கலுக்கே வந்திருப்பார்.”
“படம் எப்படி வந்திருக்கு?”
“படையப்பானு ஆரம்பிச்சதும் முதல்ல தோணின விஷயம் முருக னோட வேல் . பூஜைக்கு அதுமாதிரி ஒரு வேல் வேணும்… ரெடி பண்ண முடியுமான்னு ரஜினிசார் முதல் நாள் கேட்டார். முடியுமானு தெரியலை. தற்செயலா திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமிகும்பிட புரொடியூஸர்ஸ் போயிருக்காங்க. அங்க சாமிட்ட பூஜை பண்ணின வேல் ஒண்ணை பிரசாதமா கொடுத்திருக்காங்க. அந்த நியூஸ் கேட்டதும் நான் கேட்டேன்… அவன் கொடுத்துட்டான்’ங் கற மாதிரி அவர் முகத்துல ஒரு சந்தோஷம்.
அப்புறம் வழக்கம் போல ஏவி.எம். பிள்ளையார் கோயில்ல பூஜை. தேங்காய் உடைச்சா அதுக்குள்ள பூ இருக்கு. ரொம்ப அபூர்வமான விஷயம் இது! அதைப் பார்த்ததும் ரஜினி சார் ஹேப்பியாகிட்டாரு. கட்டிப்பிடிச்சு விசிலடிக்காத குறை.
அவருக்கு ஆன்மீகத்துல நிறைய ஈடுபாடு. அதனால இது மாதிரி சின்னச் சின்ன சென்டிமெண்ட்ஸ்ல ஒரு குழந்தை போல சந்தோஷமாகிடுவார்.
ஆரம்பமே இப்படின்னா அப்புறம் மத்ததெல்லாம் சொல்லணுமா என்ன.. அவர் மாதிரியே சூப்பரா வந்திருக்கு.” “ரஹ்மானோட மியூஸிக் எப்படி?” “அவர்ட்ட பால் கறப்பதுதான் கஷ்டம் . கறந்துட்டா அது புலிப்பால்தான்னு சொல்வாங்க . படையப்பாவோட பாட்டுகள் அவ்ளோ நல்லா வந்திருக்கு.” “படையப்பா பற்றி…?” “என்னை நெகிழ வெச்சது படையப்பாவோட கதை. அதை விளக்கமா சொல்ல ஆரம்பிச்சா படத்தோட கதையைப் பேசுற மாதிரி இருக்கும். சுருக்கமா சொன்னா ‘ஒரு நல்லது நடக்கிறதைத் தள்ளிப்போட முடியும். ஆனா, தடுக்க முடியாது’ங்கிறதுதான் மெஸேஜ் .
நான் அசந்து போய் நின்னது – அவரோட சுறுசுறுப்புதான். இந்த வயசுலயும் கொஞ்சமும் மாறாம் அதே ஸ்பீடுல நடமாடிட்டிருப்பார். அவர் ஒரு இடத்துல நின்னா அங்கே கரண்ட் ஓடற மாதிரி இருக்கும். ஏரியாவே சுறுசுறுப்பாயிடும் .
நான் பயப்படறது இந்தப் படத்துக்கு இருக்கற எதிர்பார்ப்பைப் பற்றித்தான். யாரும் இதுவரைக்கும் ஒரு வார்த்தை பேசலை. பெரிசா பப்ளிசிட்டி பண்ணலை. ஆனா, ‘படையப்பா’ பற்றி மொத்த ஸ்டேட்டும் பார்த்துட்டிருக்கு நாலு மாசமா வெளியில் போனா படம் பற்றியே விசாரிக்கிறாங்க. என்னோட பொறுப்பு உணர்வு கூடிப்போச்சுனு நினைக்கிறேன் . “
“ஷட்டிங் பற்றி சொல்லுங்களேன்…”
“யூனிட் ஆட்கள் கிட்ட ரஜினி சார் ஃப்ரெண்ட் போல பழகுவார். தினம் ஒரு ஆள்னு குறிவெச்சுக்கிட்டு வருவார். அது ஒரு லைட்மேனாகூட இருக்கலாம். காலைல வந்ததும் வணக்கம் சொல்றதுல ஆரம்பிச்சு… அவருக்கு நாற்காலி கொண்டுவந்து போடறது… ‘களைப்பா இருக்கீங்களா தலைவா… காபி, டீ, கூல்டிரிங்க்ஸ் என்ன சாப்பிடறீங்க’னு கலாட்டா பண்ணி… உண்டு இல்லைனு பண்ணிடுவார்.
ஒரு நாள் சிவாஜி சார் என் அசிஸ்டெண்ட் ரமேஷ் கண்ணாவைக் கூப்பிட்டு ‘நல்லா நடிக்கறேடா…. உன்னைப் பார்த்தாலே சிரிப்பு வருதுடா’ னு ஒரு வார்த்தை சொல்லிட்டார். உடனே ரஜினி அவனைப் பிடிச்சு ‘உனக்கென்னப்பா…. சிவாஜி சாரே உன் ரசிகர். உங்க ரேஞ்ச்சே வேறனு ஒரு வாரம் விரட்டிட்டிருந்தார் .
நான் வேலைனு வந்துட்டா அதுலயே நிப்பேன். ஏதாவது தப்புன்னா காச்மூச்னு கத்துவேன். என் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். ‘டென்ஷனாகாதீங்க ரவி. கூலா இருங்கனு ரஜினி சாரே சொல்ற அளவுக்கு இருக்கும்.
எனக்குப் பொதுவா நடிச்சுக்காட்டற பழக்கம் உண்டு. அது சிவாஜி சாரா இருந்தாலும் சரி… ரஜினி சாரா இருந்தாலும் சரி! இந்த ஸ்டில்ஸ் பார்த்துட்டு தலைவனுக்கே… ரஜினிக்கே ஸ்டைலானு கேட்காதீங்க…. “
“ரஜினி என்கிற ஹீரோ பற்றி ஒரு டைரக்டராகச் சொல்ல முடியுமா ?”
“ரஜினி , இன்னிக்குத் தேதிக்கு ஒரு ஹீரோ இல்லைங்க. ரஜினிங்கிறது ஒரு மந்திரம். அவர் ‘ ஜஸ்ட் லைக் தட ‘ ஈஸியா படம் பண்ணிட்டுப் போயிடலாம். ஆனா , அவர் மெனக்கெடுறதெல்லாம் ஏதோ முதல் படம் நடிக்கவந்த ஆள் மாதிரி இருக்கும்.
ஒரு படம் ஆரம்பிச்சா அதுல தன்னோட புது மானரிசம் என்ன , கெட்அப் எப்படியிருக்கணும் , பஞ்ச் டயலாக் என்ன பேசப்போறாம்னு ஒவ்வொரு விஷயத்துலயும் ஹோம் வொர்க் பண்ற சின்சியாரிட்டி உண்டு.
ஓகே… வெளியில் தெரிஞ்சதுனால சொல்றேன். இதுல அவர் சுருட்டு பிடிக்கறார்னா அதைக் கையில வெச்சுக்கிட்டு என்னென்ன பண்ண முடியும்னு தீவிரமா யோசிச்சுட்டு இருப்பார். திடீர்னு ‘சட்டை போடாம ஒரு சண்டை வெச்சுக்கலாம். பார்க்க வயலண்ட்டா இருக்கும்? பாரு. ‘இந்த டயலாக் நல்லா இருக்குமா’னு பேசிக் காட்டுவார். அந்த உழைப்பு பெரிய விஷயம். ரஜினி இந்த அளவுக்கு உயர்ந்தது எப்படினு யாரோ கேட்டப்போ… அவர் ஒரு பதில் சொன்னது ஞாபகமிருக்கு. ‘நிச்சயமா ஆண்டவன் அருள்தான். ஆனா, பெங்களூர்ல ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ் கோடம்பாக்க ஸ்டூடியோ கதவைத் தட்ட ஆரம்பிச்சது என்னோட முயற்சி’ன்னார். பெரிய விஷயம்ங்க.”
“ரஜினியோடு இத்தனை நெருக்கமாக இருக்கீங்க… நீங்க சொல்லுங்க . . . ரஜினி அரசியலுக்கு வரலாமா… கூடாதா…?”
“அவர் அதுக்குத் தகுதியான ஆளங்கி றது என்னோட கருத்து. அரசியல்னாலே பிரச்னைகள் தான். அதைத் தைரியமா அவரால டீல் பண்ண முடியும். ‘என்னமோ திட்டமிருக்கு னுதான் நாங்க முத்து லயே பாட்டு போட்டோம். ஆனா, ஒரு சினிமாகாரனா சுயநலமா யோசிச்சா, ரஜினிசார் சினிமாவுலயே இருக்கணும்கிறது என்னோட ஆசை ” என்கிற ரவிக்குமார் , படையப்பாவில் நடித்திருக்கிறார் .
“சும்மா ஜாலியா ஒரு ஸீன் பண்ணியிருக்கேன்” – என்கிறவர், “இன்னிக்கு ரஜினிசார்ட்ட ஜனங்க என்ன எதிர்பார்க்கிறாங்கனு எனக்கு நல்லா தெரியும். அதைச் சரியா பண்ணலேன்னா நான் ஒரு டைரக்டரே இல்லை. அரசியல்லேர்ந்து ஆன்மீகம் வரைக்கும் அங்கங்கே வெச்சு விளையாடியிருக்கோம். இனிமே… இது உங்க’ படையப்பா!” என்று சிரிக்கிறார்.
(14.03.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)