காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில முன்னாள் தலைவர் ஹர்திக் படேல் இன்று பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்த யூகத்தை அவர் மறுத்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய ஹர்திக் படேல், “நான் நாளை பாஜகவில் சேரப் போவதில்லை. இது போன்று ஏதாவது நடந்தால் உங்களுக்குத் தெரிவிப்பேன்” என்று கூறினார். மேலும் பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார். குஜராத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக நடந்த படிதார் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ஹர்திக் படேல், இவர் சமீபத்தில் காங்கிரசை விட்டு வெளியேறினார்.
பஞ்சாபின் பகவந்த் மான் அரசை தாக்கி ட்வீட் செய்துள்ள ஹர்திக் படேல், “எந்தவொரு அரசாங்கமும் குழப்பமான கைகளுக்கு செல்வது எவ்வளவு கொடியது என்பதை பஞ்சாப் இன்று மிகவும் சோகமான சம்பவத்தின் மூலம் உணர்ந்துள்ளது. பஞ்சாபில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சர்வதேச கபடி வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இன்று கொல்லப்பட்ட பிரபல இளம் கலைஞரான சித்து மூஸ்வாலா முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார். பஞ்சாப் முதல்வரும், டெல்லியில் இருந்து ஆம் ஆத்மியின் பஞ்சாப் ஆட்சியை நடத்துபவர்களும், காங்கிரஸைப் போல் மற்றொரு கட்சியாக மாறி, பஞ்சாபிற்கு வலி கொடுக்க வேண்டுமா அல்லது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். சித்து மூஸ்வாலாவுக்கு எனது அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகை ஏற்படுத்தியுள்ளது.
2019 இல் காங்கிரஸில் சேர்ந்த ஹர்திக் படேல், ராஜினாமா செய்வதற்கு முன் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதினார், அதில் நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சி சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், பாஜகவின் “முடிவெடுக்கும்” தலைமைக்காக அவர் அக்கட்சியை சமீபத்தில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM