தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ., உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று, திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.
இந்நிலையில், தன்னை அமைச்சராக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றி, கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என்று, உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
கட்சி வழங்கிய வாய்ப்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து,
அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும் கட்சித் தலைவர் மற்றும் முன்னோடிகளின் வழிகாட்டுதலில் இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கட்சிப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.
என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கட்சியும் தலைமையும் நன்கறியும்”.