ஒற்றை ஆளாக ரஷ்யப்படையினரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த உக்ரைன் வீரர் ஒருவருடைய இறுதி நிமிடங்களைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிகளுக்குள் இருந்தவாறு அந்த வீரருக்கும் ரஷ்யப்படையினருக்கும் நடக்கும் போர், ட்ரோன் ஒன்றின் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனிலுள்ள Luhansk பகுதியில் அமைந்துள்ள Novotoshkivske என்ற இடத்தில், வானிலிருந்து ட்ரோன் கமெரா ஒன்று இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளது.
பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்து போரிடும் உக்ரைன் வீரர்களில் ஒருவரை ரஷ்யப்படையினர் சுட்டுக் கொன்றுவிட, மற்றவர்கள் பின்வாங்கவேண்டிய ஒரு சூழல். அப்போது தன் சக வீரர்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக, ஒரு வீரர் மட்டும் தனித்து நின்று அந்த ரஷ்யப் படையினருடன் போராடுவதை அந்த காட்சிகளில் காணலாம்.
அவர் துப்பாக்கியால் சுட, முதலில் பின்வாங்கும் ரஷ்யப்படையினர், பிறகு தப்ப வழியில்லாத ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டுள்ள அந்த ஒற்றை வீரரை சரமாரியாகத் தாக்குகிறார்கள்,
அவரை நேரடியாக எதிர்த்துத் தாக்க இயலாத அந்த ரஷ்யப்படையினர், துப்பாக்கியால் சுடுவதை விட்டுவிட்டு, கையெறிகுண்டுகளை அவர் இருக்கும் இடத்தை நோக்கி வீசுகிறார்கள்.
அப்படி அவர்கள் வீசிய கையெறி குண்டு ஒன்று அந்த உக்ரைன் வீரர் இருக்கும் இடத்தில் விழ, திரைப்படங்களில் காட்டப்படுவதைபோல், அந்த கையெறி குண்டை எடுத்து திருப்பி ரஷ்யப்படையினர் மீதே வீசுகிறார் அவர்.
மீண்டும் அவர்கள் அந்த உக்ரைன் வீரர் மீது கையெறி குண்டு ஒன்றை வீச, அந்த குண்டு வெடித்து, அவரது கால்களை முடமாக்கிவிடுகிறது.
கால்களில் கடுமையான காயம் பட்டும், ரஷ்யப்படையினர் வீசும் மற்றொரு கையெறி குண்டையும் எடுத்து அவர்கள் மீதே வீசுகிறார் அவர்.
ஆனால், மீண்டும் ரஷ்யப்படையினர் தாக்க, அவர் இருந்த பகுதியிலிருந்து கரும்புகை எழுகிறது.
புகை அடங்கியபின் பார்த்தால், அந்த உக்ரைன் வீரர் அசைவின்றிக் கிடக்கிறார்!
அவர் உயிரிழந்துவிட்டாலும், ஒற்றை ஆளாக நின்று ரஷ்யப்படையினரை எதிர்த்து அவர் வீரமரணம் அடைந்ததை நிச்சயம் வரலாறு நினைவுகூரும் என்பதில் சந்தேகமில்லை…