சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. சூப்பர்/ சுமார் என்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘டாக்டர்’ படம் போலவே வசூலில் ‘டான்’ என்பதை நிரூபித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா-மகன் செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியுள்ளது என்பதற்கு இப்போதும் டானுக்கு படையெடுக்கும் மக்களே சாட்சி.
‘டாக்டர்’ போலவே ’டான்’ படமும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தமிழகத்தில் சுமார் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாள் தமிழகத்தில் 8 கோடியே 60 லட்ச ரூபாய் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூல் செய்தது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்திருந்தது.
’டான்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 29 நாட்கள் கழித்து வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று நெட்ஃப்ளிக்ஸ் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.