தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அடுத்த கொண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் கணவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். அவர் வசித்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் பாடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. ஒரு முறை காயத்ரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வீட்டில் உதவிக்கு காயத்ரி அந்தப் பெண்ணை அழைத்தார். அதோடு அந்தப் பெண் காயத்ரியின் வீட்டில் கடந்த பிப்ரவரி வரை தங்கியிருந்தார். இந்த காலகட்டத்தில் காயத்ரியின் கணவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே திருணம் மீறிய உறவு ஏற்பட்டிருக்கிறது.
இது காயத்ரியின் கவனத்துக்கு வந்ததும், அவர் இருவரையும் எச்சரித்து போலீஸில் புகார் செய்தார். இருப்பினும், அவருக்கு ஆத்திரம் தணியவில்லை. அதனால், அந்தப் பெண்ணை பழிவாங்க முடிவு செய்தார். இந்த நிலையில் புகாரைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதிப்பதற்காக அந்தப் பெண்ணை காயத்ரி தனது வீட்டுக்கு அழைத்தார். சிறிது நேரம் காயத்ரி அவருடன் வழக்கைத் திரும்பப் பெறுவது குறித்து விவாதித்தார். பின்னர் அந்தப் பெண்ணை அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.
அந்த அறையில் ஏற்கெனவே நான்கு ஆண்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் அந்தப் பெண்ணின் வாயைத் துணியால் பொத்திவிட்டு, அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதை காயத்ரி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, `நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன்’ என்றும் மிரட்டியிருக்கிறார்.
காயத்ரியின் ஆட்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் காயமடைந்தார். அதையடுத்து, அவர் உறவினர்கள் அவரை மெட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதனடிப்படையில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகள் நான்கு பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்குக் காரணமான காயத்ரியும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.