புதுச்சேரி : ‘வாழ்க்கைத்தரம் ‘ஓகோ’ என்று மாற வேண்டுமானால் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தயாராகுங்கள்’ என கல்வி ஆலோசகர் நித்யா பேசினார்.
‘தினமலர்’ வழிகாட்டி நிகழ்ச்சியில், அரசு வேலை வாய்ப்புகள் குறித்து, அவர் பேசியதாவது:
ஒரே நாளில் வாழ்க்கைத்தரம் ஒபாமா போல ‘ஓகோ’ வென மாற வேண்டுமானால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி போன்ற அரசு பணிக்கான தேர்வுகளை எழுதுங்கள்.வீடுகளில் நகை, கார், கோடிக்கணக்கான பணம் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்காத மரியாதை ஐ.ஏ.எஸ்., படித்தவருக்கும், அரசு வேலையில் சேர்வோருக்கும் கிடைக்கிறது.மேலும், ஒரு பச்சை ‘இங்க்’ கையெழுத்தில் மக்களின் தலை எழுத்தையும் மாற்றலாம்.
மக்களுக்கு சேவை செய்த மனதிருப்தியும் கிடைக்கும். இது போன்ற அதிகாரம் மிக்க அரசு வேலையை, வேறு எந்த வேலையுடனும் ஒப்பிட முடியாது. பெற்றோருக்கும் கவுரவத்தை கொடுக்கும்.இளங்கலை பட்டம் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக முதல் நிலை தகுதித்தேர்வு நடக்கும். அதில், தேர்ச்சி பெறுவோர் பிரதான தேர்வும், அதன்பின், நேர்முகத் தேர்விலும் பங்கேற்க வேண்டும்.
தேர்வர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், அகில இந்திய அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முன்னிலை பெறுவோருக்கு ஐ.ஏ.எஸ்., பணி கிடைக்கும்.இத்தேர்வில் பங்கேற்க ஆழ்ந்து படிக்கும் புலமை வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து வந்த ஏராளமானோர், தமிழில் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.இந்த தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள், பொது அறிவு புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
பொருளாதாரம், கணிதம், அறிவியல், அரசியல், நாட்டு நடப்பு, அரசியல் அமைப்புச் சட்டம், புவியியல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.எந்தப் பள்ளியில் படித்திருந்தாலும் மத்திய தேர்வாணைய தேர்வில் சாதிக்கலாம்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற தற்போதுள்ள பூஜ்ய நிலையில் இருந்தே ஆரம்பிக்கலாம். இலக்கினை நோக்கி பயணிப்பது தான் முக்கியம்.
ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு தயாராக பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் மற்றும் தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் வரலாற்று பாடப் புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். டிகிரி முடித்த பின் மத்திய தேர்வாணைய தேர்வை அணுகினால் எளிதாக வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement