புதுடெல்லி:
விசா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை மே 30ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்தது. முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை மே 30ம்தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதுவரை கார்த்தியை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.