புது டெல்லி: உலகம் முழுவதும் பரவும் குரங்கு அம்மை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் சில பகுதிகளில், குரங்கு அம்மையும், குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பும் அதிகரித்து வருவதாக உலக சுகாதாரநிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல் மட்டும் அல்லாமல், உடல் வலி, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. பாதிப்பு தீவிரமாக இருந்தால், முகம், கைகளில் கட்டிகள் ஏற்பட்டு உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது.
இது குறித்து புனேவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைராலஜி பிரிவு விஞ்ஞானி பிரக்யா யாதவ் கூறியதாவது:
இந்தியாவில் குரங்கு அம்மைபாதிப்பு இல்லை என்ற காரணத்துக்காக, நாம் தயார் நிலையில் கவனக் குறைவாக இருந்துவிடக் கூடாது. இது பயணத் தொடர்பு மூலம் பரவவில்லை. ஆனால், சமூகதொடர்பு மூலம் சில பகுதிகளில் பரவியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுவதால், இதன் உடனடி அபாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளை தாண்டி குரங்கு அம்மை எப்படி பரவியது என்ற கேள்விக்கு பதில் இல்லை. மரபணு மாற்றம்தான், இந்த வைரஸ் பரவுவதற்கு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இந்தியாவில் பசு மற்றும் எருமைகளிடமிருந்து மனிதருக்கு அம்மை நோய் பரவியுள்ளது. ஆனால் குரங்கு அம்மை நோய் கிருமி வெளிநாடுகளில் ஏற்பட்டது. அது இந்தியாவில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை நோயை போக்க, பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை பயன்படுத்த முடியுமா? என பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகியநாடுகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் பெரியம்மை பிரிவு தலைவர் ரோசாமண்ட் லெவிஸ் கூறுகையில், ‘‘ குரங்கு அம்மை எளிதில் பரவாது. உடலளவில் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே இந்தோய் பரவும். அதனால் இதற்கு மிகப் பெரியளவிலான தடுப்பூசி திட்டம் தேவையில்லை’’ என்றார்.
குரங்கு அம்மைக்கு தனியான தடுப்பூசி எதுவும் உருவாக்கப்படவில்லை. இதற்கு பெரியம்மை தடுப்பூசி மருந்தே 85 சதவீதம் பயனுள்ளதாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.