நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் 21வது திருத்தச் சட்டமாக முன்வைக்கப்பட்ட வரைவில் சில விடயங்களில் உடன்பாடு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி 21வது திருத்தத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் 21வது திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதில் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள மாற்றங்கள் செய்யப்பட்டால், 21வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும் என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்மொழியப்பட்ட மாற்றங்களில் ஜனாதிபதியின் கீழ் எந்த அமைச்சும் இருக்க முடியாது என்ற ஷரத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென்பதையே ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துவதாகவும் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.