கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பரவும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சலால் 47 வயது நபர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு மே 17-ம் தேதி காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின், இறுதியாக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கேரள மாநில சுகாதாரத்துறை மக்கள் அச்சப்படாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை முடுக்கி விட்டுள்ளது.
அதென்ன வெஸ்ட் நைல் காய்ச்சல்?
வெஸ்ட் நைல் எனும் க்யூலெக்ஸ் வகை (Culex) கொசுக்களால் இந்த நோய் ஒருவரிடத்திலிருந்து மற்றவருக்குப் பரவும். முதன்முதலில் 1937-ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. இந்தக் காய்ச்சல் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் 2011-இல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மலப்புரத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் 2019-ல் இந்தக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் ஒருவரைக் கடிக்கும்போது அவரிடமிருந்து இந்நோய் மற்றவருக்குப் பரவும். வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோய்கள் ஏற்படலாம். நோய் தீவிரமடையும் வரை இந்நோயின் அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது. மனிதர்களில் இந்தத் தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதனால் ஏற்படுகிறது.
இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நோயைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்களை அளிப்பதும், கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதன் மூலமே இந்நோய் பரவுதைக் கட்டுப்படுத்த முடியும். நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் பகுதியை ஆய்வுசெய்ய சிறப்பு மருத்துவக் குழுவினர் சென்றனர். அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவைப்பட்டால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மது விற்பனைக்குத் தடை விதிக்கும் Dry Day அமல்படுத்தலாம் என்று சுகாதாரத் துறை மாவட்ட நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. “கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தனிநபர்களும் பொறுப்பை உணர்ந்து தாங்கள் வசிக்கும் பகுதியில் கொசு உற்பத்தி நடைபெறாத வகையில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கால்வாய் அடைப்பு, நீர் தேங்கியிருக்கும் இடம் போன்றவற்றை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும்” என கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.