கோட்டயம் வழியாக இரட்டை ரயில் பாதையில் போக்குவரத்து தொடக்கம்: 100 சதவீதம் மின்மயமாக்க சாதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கோட்டயம் வழியாக இரட்டை ரயில் பாதையில் நேற்றிரவு முதல் போக்குவரத்து தொடங்கியது. இதன்மூலம் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை கொண்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடக மாநில எல்லை வரை சுமார் 600 கி.மீ தூர ரயில் பாதை உள்ளது. இந்த பாதையில் மின்சார இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் பெரும்பாலான இரட்டை பாதை பணிகள் முடிவடைந்தன.இந்த நிலையில் கோட்டயம் அருகே சிங்கவனம் – ஏற்றுமானூர் இடையே சுமார் 16 கி.மீ பணிகள் மட்டுமே பாக்கி இருந்தன. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடந்து வந்தன. இதனால் நாகர்கோவில் – மங்களூரு பரசுராம் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி – பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 21 ரயில்கள் நேற்றுவரை ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, கடந்த சில தினங்களாக சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இது வெற்றி அடைந்ததை தொடர்ந்து, நேற்றிரவு முதல் இந்த பாதை போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. முதன்முதலாக இந்த பாதையில் பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேற்றிரவு 9.42 மணியளவில் கோட்டயம் ரயில் நிலையத்தில் இந்த முதல் ரயிலுக்கு பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் முகுந்த் ராமசாமி மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பாதை போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதை தொடர்ந்து, 100 சதவீத மின்சார இரட்டை ரயில் பாதை கொண்ட மாநிலமாக கேரளா மாறியுள்ளது.இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மங்களூரு வழியாக செல்லும் ரயில்கள் கிராசிங்கிற்காக பல்வேறு ரயில் நிலையங்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.