திருமலை: சிமென்ட் ேலாடுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோயிலுக்கு சென்று திரும்பிய பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரந்தசிந்தலாவில் உள்ள வட்டரபாவி கிராமத்தை சேர்ந்த 38 பேர் சைலம் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை சரக்கு வேனில் கோயிலுக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவர்கள், இரவில் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் ரந்தசிந்தலா துணை மின் நிலையம் அருகே இவர்களது வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் சிமென்ட் லோடு ஏற்றிய லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி மீது பக்தர்கள் வந்த சரக்கு வாகனம் மோதி நொறுங்கியது. இதில் சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. வாகனத்தில் வந்தவர்கள் இடிபாட்டில் சிக்கி அலறி துடித்தனர். விபத்தை கண்டு அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதி மக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நாராயண கோட்டம்மா (65), கோட்டம்மா(70), புலிபாடு கோட்டேஸ்வரம்மா(55), மக்கென வெங்கடரமணா(40) ஆகிய 4 பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றவர்களை மீட்டு குரஜாலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமிநாராயணா(35), குருசெட்டி ரமாதேவி(50), கனலாபத்மா(40) ஆகிய 3 பேரும் இறந்தனர்.படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்த மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். டிரைவர் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வாகனத்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடமும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.